நாயகன் சிஸ்கோ!


அன்பு நண்பர்களே வணக்கம்!

சிஸ்கோ என்றாலே தாமதமாகத்தான் வரும் என்று ஒரு எழுதப்படாத விதி போல மாறி விட்டது! சிஸ்கோ முதல் புத்தகம் 25 நாட்களுக்கு மேல் தாமதமாகத்தான் புத்தகம் கைக்கு வந்து சேர்ந்தது! அதைப் போல இரண்டாவது சிஸ்கோ புத்தகமும் தாமதமாயிட கூடாது என்பதற்காக, டிசம்பர் மாதமே வேலையை முடித்து பிரிண்டிங்கு அனுப்பி விட்டு, மோட்டு ஓலையை பார்ப்பது போல் தினமும் பார்த்து கொண்டிருந்தால், அதுவும் அதோ, இதோ என்று நாட்கள் ஓடியதே தவிர புத்தகம் வந்து சேர்ந்தபாடில்லை! ஒருவழியாக 13 ந்தேதி மாலைதான் பிரிண்டிங் ஆபீஸிலிருந்து போன் வந்தது! உங்கள் புத்தகம் ரெடி! பணம் அனுப்பியதும் புத்தகத்தை போட்டு விடுவோம் என்று சொல்ல, நானும் அவரிடம் இன்றே போட்டு விடுங்கள். 15 ந்தேதி பொங்கல் அன்று சென்னையில் நண்பர்கள் மத்தியில் புத்தகத்தை வெளியீடுவதாக திட்டமிட்டுள்ளேன் அதனால், இன்று எப்படியாவது அனுப்பி விடுங்கள் என்று அழுத்தமாக சொன்னதும், சொன்னது போலவே அவர்களும் அனுப்பி வைத்து விட்டார்கள்! அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், பார்சல் போட்டு அனுப்பிய ரசீதுடன், பொங்கல் விடுமுறை என்பதால் புதன்கிழமைதான் டெலிவரி தருவார்களாம் என உடன் ஒரு வாய்ஸ் மெசேஜ்.ம் வந்து சேர்ந்தது! ஆஹாங்! புத்தக வெளியீடு அவ்வளவுதானா? என்று மனதிற்குள் அசைபோட்ட படியே இரவு கழிந்தது. மறுநாள் சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு மேல் பார்சல் ஆபீஸ்க்கு சென்று, பார்சல் வந்து விட்டதா சார் என ரிசீப்ட் நெம்பர் சொல்லி கேட்க, அவரும் இந்த லாரி மிட்நைட் ல வந்து சேரும் நாளை காலை பத்து டூ பன்னிரெண்டு மணிக்குள் வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என சொன்னதுமே, ஒருவித சந்தோஷத்துடன் அங்கிருந்து நடையை கட்டினேன்! மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வண்டி எதுவும் கிடைக்காது என்ற காரணத்தினால், நண்பரின் வண்டியை வரவழைத்து விட்டு, அங்கேயே காத்திருக்க தொடங்கினேன்! டெலிவரி கொடுக்கும் நபர் சாவகாசமாக 11 மணி வாக்கில் வந்து சேர, பார்சலுக்கான பணத்தினை கொடுத்து விட்டு பார்சல்களை அவசரம் அவசரமாக எடுத்துக் கொண்டு, வீட்டை நோக்கி செல்லத் தொடங்கினோம்! ஒருவழியாக எல்லா பார்சலையும் வீட்டில் இறக்கி வைத்துவிட்டு நண்பருக்கு பணத்தை கொடுத்து அனுப்பி விட்டு, ஒரு பார்சலை மட்டும் பிரித்து பையிலும், பேக்கிலும் நிரப்பிக் கொண்டு பஸ் நிலையம் நோக்கி மீண்டும் ஓட்டம் எடுக்கத் தொடங்கினேன். போன நேரத்திற்கு சென்னை செல்வதற்கு ஒரு பஸ் தயாராக இருக்க அதில் ஏறிக் கொண்டதும் பஸ் புறப்படத் தொடங்கியது! பஸ் புறப்பட்டதுமே ஒருவித நிம்மதிப் பெருமூச்சு வரத் தொடங்கியது! நண்பர்களிடம் சரியாக நாலுமணிக்கு புத்தக அரங்கிற்கு வருவதாக சொல்லியிருந்தேன்! சொன்னதைவிட ஒரு அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே புத்தக அரங்கிற்கு சென்று விட்டேன்! அதன் பிறகு நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து சேர சரியாக ஐந்து மணிக்கு எனது நெடுநாளைய நண்பர் இரா.தி. முருகனிடம் சிஸ்கோ புத்தகத்தை கொடுத்து, ஒவ்வொருவருக்கும் கொடுக்க சொல்ல, அவரும் சிரித்த முகத்துடன் புத்தகத்தை வந்திருந்த நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் புத்தகத்தை அவர் கையால் கொடுக்க, அதை நண்பர்கள் கைகளில் இருந்த செல்போன் மூலமாக பதிவு செய்து கொண்டிருந்தனர். ஆஹா என்ன ஒரு அற்புதமான தருணம் என நினைத்துக் கொண்டேன்! பிறகு நண்பர்கள் ஒவ்வொருவரும் சிறிது நேரம் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு விட்டு, பிறகு அவரவர் வழிகளில் செல்லத் தொடங்கினர்! நானும் மாலை வரை அரங்கில் இருந்து விட்டு, கொண்டு வந்த சிஸ்கோவை நமது ஸ்டாலில் போட்டு விட்டு நானும் புறப்பட்டு மிட்நைட்டில் வீடு வந்து சேர்ந்தேன் ஒருவித திருப்தியுடன்.

2023 பொங்கல் தினம் மறக்கமுடியாத தினமாக மாறிவிட்டது! அன்று எடுத்த சில புகைப்படங்கள் கீழே காண்க:

 













  

இந்த மகிழ்வான தருணம் நடப்பதற்கு முன்பு, இலங்கையில் வெளிவரும் வாரப்பத்திரிக்கையான தீம்புனல் பத்திரிக்கையில் நமது வகம் காமிக்ஸ் பற்றியும், இலங்கை நண்பர்கள் இ.சு.முரளிதரன்,  எஸ், வினோபா அவர்கள்  கைவண்ணத்தில் உருவான செவ்விந்திய பூமி & ஏகே 67 மர்மம் பற்றியும் கட்டுரை வெளியிட்டுள்ளனர். அதன் பக்கங்கள் கீழே காண்க:


 
 
 

இறுதியாக! நமது வகம் காமிக்ஸில் அடுத்த வெளியீடாக இத்தாலியின் மதிப்புமிக்க பொனெல்லியின் கதை நாயகரான நிக் ரைடரின் சீன நிழலும், புதிர் தேசம் மெக்ஸிகோவும் ஒரே இதழில் வெளிவரவிருக்கிறது. இதைப்பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்! 2024 இல் புதிதாக மேலும், இரண்டு புதிய நாயகர்கள் வந்து இணைய விருக்கிறார்கள்! அதில் ஒருவர் நம் பால்யத்தில் கலக்கிய அதிரடி டிடெக்டிவ் நாயகர். அவர் யாரென விரைவில் அறிவிப்பு வரும்! முடிந்தளவு நண்பர்கள் சந்தாவில் இணைந்து கொண்டால், நம் விரைந்து முன்னேறிச் செல்ல உதவியாக இருக்கும்! சரி நண்பர்களே மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம் - நன்றி  
 
 

 

Comments

  1. 2024 இல் புதிதாக மேலும், இரண்டு புதிய நாயகர்கள் வந்து இணைய விருக்கிறார்கள்! அதில் ஒருவர் நம் பால்யத்தில் கலக்கிய அதிரடி டிடெக்டிவ் நாயகர். அவர் யாரென விரைவில் அறிவிப்பு வரும்! - ஜெஸ் லாங்கா ?

    ReplyDelete
  2. ##நமது வகம் காமிக்ஸில் அடுத்த வெளியீடாக இத்தாலியின் மதிப்புமிக்க பொனெல்லியின் கதை நாயகரான நிக் ரைடரின் சீன நிழலும், புதிர் தேசம் மெக்ஸிகோவும் ஒரே இதழில் வெளிவரவிருக்கிறது. ###
    பொனெல்லியின் ஒரே நாயகரின் கதைகளை ஒன்றாக வெளியிடுவதற்க்கு பதிலாக - நிக் ரைடருடன் கிராபிக் நாவல் அல்லது வேறுநாயகர்களின் கதையை சேர்த்து வெளியிடலாமே சார்

    ReplyDelete
    Replies
    1. சீன நிழல் நிக் ரைடர், புதிர் தேசம் மெக்ஸிகோ ரெய்ஸ் என்ற நாயகர் சார் இரண்டு வெவ்வேறு கதைக்களம் வெவ்வேறு நாயகர்கள் தான்!

      Delete
  3. ஆஹா...மேலும் இரண்டு நாயகர்கள். அதிலும் எமது பால்ய கால நாயகர்களா ?! மிக்க சந்தோஷம் சார். அதில் ஒருவர் ராணியில் கலக்கிய கிளாஸிக் 007 அவர்கள் தானே சார் ? நிக் ரைடரின் படைப்பைப் படிக்கத் துடித்துக் கொண்டுள்ளேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பால்ய காலத்து நாயகர் ஒருவர்தான் சார்!
      ஒருவர் புதியவர்.
      007 இல்லை! நிக் ரைடரை நானும் எதிர்பார்த்து கொண்டுள்ளேன்!

      Delete
  4. அருமையான அறிவிப்பு கலீல் ஜி..😍

    நண்பர் RTM மூலம் நண்பர்கள் முன்னிலையில் சிஸ்கோ-2 வெளியிட்டது பாராட்ட தக்க விசயம் ஜி.👍

    அடுத்த வெளியீடுகளை நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்.🙏❤💐

    ReplyDelete
  5. சிறப்பு. உங்கள் விடா முயற்சிகள் பாராட்டுக்குரியது. சமூக வலைத்தளங்களில் மட்டுமே அறிந்த, முகம் அறியா பல காமிக்ஸ் நண்பர்களை புகைப்படங்களில் பார்ப்பது உற்சாகமளிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி சகோ! நானே சிலரை இந்த புத்தக வெளியீட்டில் தான் சந்தித்தேன்

      Delete
  6. சிஸ்கோ கிட் 2 , வழக்கம் போல் அருமையான வடிவமைப்பு,, சிஸ்கோ கிட் 3 waiting.. சீன நிழல் நிக் ரைடர், புதிர் தேசம் மெக்ஸிகோ ரெய்ஸ் ,, நல்வரவு

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி சகோ! சிஸ்கோ 3 விரைவில் அறிவிப்பு வரும்!

      Delete

Post a Comment

Popular posts from this blog

ஈரோட்டில் டயபாலிக்!